ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு


உலக மொழிகளில் உள்ள எல்லா சொற்களுக்கும் தங்களுக்கான இலக்கணத்தை தாங்களே வரையறை செய்து கொள்ளும் சுதந்திரம் இருக்கின்றது, "பெண்" என்னும் சொல்லைத் தவிர.

காலங்காலமாய் உலகின் எல்லா பகுதிகளிலும் பெண் என்பவள் எப்படி இருக்கவேண்டும் என்ற வரைவை வேறு யார் யாரோ தான் இயற்றுகின்றார்கள். அந்த வரைவுக்கு பெண்ணின் உடலும் மனமும் தன்னை அறியாமலேயே பல நூறு பரம்பரைகளாக இசைவாக்கமடைந்து விட்டது. தன்னைத் தானே தீர்மானிக்கும் சிந்தனைக்கான நேர அவகாசம் அல்லது அதற்கான தேவையே கூட பெரும்பாலான பெண்களுக்கு இருப்பதில்லை.

இப்படி வருவோர் போவோர் எல்லாம் தங்கள் விருப்பப்படி விதிகளை நிரப்பிவிட்டுப்போகும் பெண்ணியக் கோட்பாட்டு நூலின் பக்கங்களை பிய்த்துப் போட்டு அவற்றை நோக்கி பாரபட்சமும் ஈவிரக்கமும் இன்றி எள்ளி நகையாடி இருக்கிறார் அம்பை, இந்த சிறுகதைத் தொகுதி வழியாக.

60 வயது இணைந்து வாழ்ந்த தம்பதியரின் திருமண நாட்களை ஒட்டி நடந்த ஒரு உரையாடலின் ஒரு பகுதி இது.

"இரண்டு வருட வாடகைப் பணத்தையும், போக வர வண்டிச்செலவையும், குடித்தனம் வைப்பதற்கான செலவையும் மட்டும் கேட்கிறார்கள் பிள்ளை வீட்டார்....,................கல்யாணச் செலவு இருக்கின்றது இன்னும்"

இந்த நிலை இன்னும் கூட மாறாமல் இருப்பதையும், பெண்களும் இதை வழி மொழிவதையும் சமீபத்திய கலந்துரையாடல் ஒன்றில் கண்டேன். ஆச்சரியமாக இருந்தது.

WhatsApp இல் ஒரு நகைச்சுவை வரும். கணவரிடம் செலவுப் பட்டியலை காண்பிக்கையில் எல்லா நாளிலும் EPT என்று மனைவியால் எழுதப்பட்டிருக்கும். அது என்ன என்று கணவர் கேட்கையில் எங்க போச்சுன்னு தெரியல 🤣🤣 என்று சொல்வதாக அந்த நகைச்சுவை முடியும். நான் கூட மாதக்கணக்கு எழுதுகையில் miscellaneous என்று எழுதுவது உண்டு. கீழிருக்கும் வாக்கியத்தை படித்தபோதுதான் இது காலங்காலமாக தொடர்ந்து வருவது போல் இருக்கின்றது என்று எண்ணி சிரித்துக்கொண்டேன்.

"அப்பாவால் ஏற்கப்படமாட்டாது என்று அவள் கருதிய செலவுகள் இன்னபிற என்கின்ற தலைப்பின் கீழ் வந்தன. இன்ன பிறவின் செலவு தொகை கூடவே இருந்தது." 😂

வழக்கமான பெண்ணியக்கதைகளில் கழிவிரக்கம், கண்ணீர், இலட்சியம், புரட்சி, அழகு, காமம், புடவை, பூ, தாய்மை, பொறுமை, தியாகம் என்று ஒரே steriotyping வகையாக இருக்கும். அதிலும் இப்படி எழுதுபவர்கள் அநேகமாக பெண் எழுத்தாளர்களாக இருப்பது இன்னும் எரிச்சலை ஏற்படுத்தும். புனைவிலேனும் பெண்ணை அவளாகவே இருக்க விடுங்களேன் என்று தான் அலறத் தோன்றும்.

அப்படி அலுப்பூட்டும் அம்சங்கள் எதுவும் இந்தத் தொகுதியில் இல்லை. அதனாலேயே வாசித்து முடித்தபின் ஒரு சோர்வு வரவில்லை. பெரும்பாலான கதைகள் தொடர்வண்டிப் பயணங்களில் நாம் சந்திக்கும் யாரென்று தெரியாத மனிதர்களைப் பற்றியவை. யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு பயணியிடமும் தான், நம் ஒவ்வொருவரிடமும் தான் உலகத்திற்குச் சொல்ல எத்தனை எத்தனை கதைகள் இருக்கின்றன?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக