தைப்பொங்கல்


முள்ளாகக் குத்திய
முன்பனிக்காலம் முடிந்து, 

இதமாய் வருடும் 
இளவேனிலின் 
இனிய உதயம்!! 

ஆநிரை கட்டி உழுது 
ஆடியில் விதைத்து வளர்த்து 
அறுத்த நாற்றை நட்டு
அளவாய் உரமிட்டு 

ஆசியாய் மழை கொண்டு 
அரும்பாடு பட்டு உழைத்து 
ஆறு திங்கள் கழிய 

அமோக விளைச்சலில் 
ஆனந்திக்கும் உழவரும் 
அருசுவை உண்ணும் 
அனைவரும் விரும்பும் 

அழகிய தைத்திருநாள்!!! 

புதுப்பானையில் 
பால் பொங்கி 
பச்சரிசியும் பருப்பும் 
பனைவெல்லமும் இதர 
பல திரவியமும் இட்டு 

பொங்கலோ பொங்கல் என 
பொங்கல் வைத்து 
பச்சை மஞ்சளும் 

பழமும் கரும்பும் சேர்த்து 
பகலவனுக்குப் 
படையலிட்டு நன்றி 

பகரும் அற்புதமான 
பண்டிகை நாள்!!! 

மக்கள் அனைவரும் 
மனவேற்றுமைகள் 

மறந்து கூடி 
மஞ்சு விரட்டியும் 
மஞ்சள் நீரூற்றியும் 

மண் பானை உடைத்தும் 
மேலும் பலவும் 

மிகையாய் கொண்டாடி 
மகிழ்ந்து இனித்திருக்கும் 
மகத்துவமான நன்னாள்!!! 

தமிழர் பாரம்பரியத்தின் 
தனித்துவமான இத் 
திருநாளில் 

தங்க விக்கிரகமாய் 
தளிர் நடை போட்டு வரும் 
தைத்திருமகள் வரவால், 

நம்மனைவர் வாழ்வில், 
பழைய துன்பங்கள் தவறுகள் நீங்கி, 
புதிய இன்பங்கள் சிந்தனைகள் நிறைந்து, 
நன்மை பல பயக்கட்டும்!!! 

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக