தொலைக்காட்சியில் தமிழின் தொன்மை

சிறுவயதில் சரித்திர எழுத்தாளர்களின் புத்தகங்கள் படித்தபோது அந்த கதைக்களங்களைத்தேடிப் போகவேண்டுமென்று ஆவலாக இருக்கும்.
தமிழ்நாட்டை பார்த்தே இராத அந்த காலங்களில் இன்று என் உறவினர் வசிக்கும் உறையூரைக்கூட கல்கியின் கண்கள் வழி தான் கண்டிருந்தேன். அரண்மனைகள், கோயில்கள், கோட்டை வாயில்கள், அகழிகளென்றுதான் கற்பனையும் செய்திருந்தேன்.

கதைகளில் வரும் இடங்களை, சில பரிச்சயமில்லாத வார்த்தைகளைக்கூட எழுதி வைப்பது என் வழக்கம். திருப்புறம்பியம், திருக்காட்டுப்பள்ளி, குடந்தை, பாலாறு, பெண்ணையாறு, மண்ணாறு, கோடியக்கரை,கருவூர், ஆனைமலைகுகைகள், வாசிஷ்டி, பரசுராம பட்டணம், அஞ்சனவேல் கோட்டை, பூம்புகார், தொண்டி, காயல்பட்டிணம்,அக்ஷயமுனை, மாநக்காவரம், முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம்(இந்தப்பெயர் எனக்குள் சரியாகப் பதியவில்லை) என்று அது நீஈஈஈஈஈஈஈஈஈஈண்டு செல்லும்.ஒரு 40 பக்க கையேடு ஒன்றை ஊரிலிருந்து வந்திருந்த மாமாவிடம் காட்டி இந்த இடங்களுக்கெல்லாம் அழைத்து செல்வீர்களானால் நான் இந்தியாவுக்கு வருகிறேன் என்று சொன்னதும் அதற்கவர் சிரித்துக்கொண்டே அதற்கு என் ஆயுள் போதாதென்று பதில் சொன்னதும் பசுமையானவை.


அவ்வளவு ஏன்? பெரும்பாலான வரலாற்று இடங்கள் இப்போது இல்லாமலோ பெயர் மருவியோ போய்விட்டன என்று கூட அப்போது தெரியவில்லை. பழையாறை இல்லையாம். கடம்பூர் இரு பகுதிகளாக பிரிந்துவிட்டதாம் என்றெல்லாம் பல உதாரணங்கள்.

இதையெல்லாம் தெரிந்து அறிந்து கொண்டபோது ஏற்பட்ட வருத்தத்தைவிட காவிரியையும் கொள்ளிடத்தையும் நேரில் பார்த்தபோது ஏற்பட்ட நெஞ்சடைப்பு இருக்கிறதே ??? ஐயகோ !!
அமராவதியும் வைகையும் தான் ஆறுதல் சொல்லித்தேற்றின.

ஆனால் இந்த இடங்களிலெல்லாம் பார்க்கவேண்டுமென்ற ஆவல் மட்டும் குறையவே இல்லை. நடக்கவும் இல்லை. இருப்பினும் எது எப்போது நடக்க வேண்டுமென்ற ஒரு விதி இருக்கின்றதல்லவா?

கருவுற்றிருந்த போது ஒரு முறை பார்த்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முன்னோட்டம் இந்த ஆவலைக்கொஞ்சம் தீர்த்தது.நேரில் பார்க்கமுடியாத இடங்களை நிகழ்ச்சியாலாவது பார்க்கமுடிந்ததே என்று அரை நிம்மதி கிட்டியது. அதுவும் கருவுற்றிருந்தபோது பார்க்கக்கிட்டியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்றுதான் சொல்லவேண்டும். அனைத்து அத்தியாயங்களையும் வாரந்தோறும் விடாமலும் நேரம் கிடைக்கையில் விரும்பியும் பார்த்தேன். ஒருவேளை குழந்தை வளர்ந்து தமிழ்நாட்டை பார்க்கத் துணைவருவாளென்ற நப்பாசைதான்.

தமிழர்களில் வாழ்வியலை; அதன் அழகியலை கூடுமானவரை சேர்த்து நேர்த்தியாகத் தொகுத்து அவற்றின் அழகை மேலும் மெருகேற்றிக் காட்டிய அற்புதமான தொடரிது. தமிழார்வலர்கள் தவறாமல் பார்க்கவேண்டிய பொக்கிஷம் இந்த "ழ"

(ஆனால் ஏனோ பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். தமிழார்வலர்களுக்கு திரைப்பொருள் குறைவு போலும்.)



"ழ" பற்றிப்பேசுகையில் என்னால் தவிர்க்கவே முடியாத இன்னொரு தொலைக்காட்சி நிகழ்ச்சி "யாத்ரிகன்". இது "ழ" விற்கு முன்பாகவே ஒளிபரப்பாகக்கொண்டிருந்தபோதும் நான் அறிந்திருக்கவில்லை. YouTube "ழ" வுடன் பரிந்துரைத்ததில் தான் அறிந்தேன்.

யாத்ரிகன் பல இடங்களுக்கு பயணித்திருந்தார். ஆனால் அதில் ஒரு பகுதி முற்றுமுழுதாய் பிரத்தியேகமாய் "பொன்னியின் செல்வன் பாதையில்" இருந்தது.

என்னுடைய மீதி வரலாற்றுப்பயண ஆவலை இது தான் தீர்த்துவைத்தது. கதையோடு நகர்ந்த பயணம், கூடவே மிக நேர்த்தியான வசனங்கள்,கதைக்களங்களின் இன்றைய நிலை என அனைத்தும் அழகாக கோர்க்கப்பட்ட நிகழ்ச்சித்தொகுப்பு என்று சற்றே சிந்தித்துப்பாருங்களேன். நினைக்கவே நெஞ்சில் ஆசை பெருகுகிறதல்லவா?

இலங்கையில் நானே பார்த்திராத ஆனால் அருள்மொழிவர்மரும் வந்தியத்தேவரும் மந்தாகினி தேவியும் தடம் பதித்திருக்கக்கூடிய இடங்களை யாத்ரிகன் சுற்றிக் காட்டியபோது,,,,,,
அந்த உணர்வை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
இப்போதெல்லாம் பொன்னியின் செல்வன் படிக்கவேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் இந்தத்தொடரைத்தான் பாரப்பேன். கருவிலிருந்தே கேட்பதால் என் குழந்தைக்கு இது மனப்பாடமே ஆகி இருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக