மனிதமும் மாற்சர்யமும்

நான் ஒரு இந்து.

இந்து சமய அனுட்டானங்கள், விரதமுறைகள், விழுமியங்கள், திருமுறைகள்,நெறிமுறைகள், சில வேதாந்த சித்தாந்தங்கள் புராணப்பெருங்கதைகள், கருத்துக்களை தெரியுமெனக்கு.
ஆயினும் புராண,இதிகாசங்கள்,வேத உபநிடதங்கள் அனைத்தையும் கண்டறிந்து கற்றுணர்ந்திலேன்.

இதுவே இப்படி என்றால் மற்ற சமயங்களைப்பற்றி பெரும்பாலும் எதுவும் தெரியாதெனக்கு.

புத்தர் மனித வாழ்வின் நிலையை எண்ணி துறவறம் மேற்கொண்டார் என்பதைத்தவிர பௌத்தம் பற்றி எதுவும் தெரியாதெனக்கு.

ஐந்துவேளை தொழுகை, ஒருமாதம் நோன்பு என்பதைத்தவிர இஸ்லாம் பற்றி எதுவும் தெரியாதெனக்கு.

யேசு சிலுவையில் அறையப்பட்டார்,பின்பு உயிர்த்தெழுந்தார் என்பதைத்தவிர கிறிஸ்தவம் பற்றி எதுவும் தெரியாதெனக்கு.

தீர்த்தங்காரர்கள் எறும்புகளுக்கும் பூச்சிகளுக்கும் வலிக்குமென்று மயிற்பீலிகளால் பாதை ஒதுக்கி நடப்பார்கள் என்பதும் மண்ணிற்கடியில் விளையும் பொருள்களை உண்ணமாட்டார்கள் என்பதையும் தவிர சமணம் பற்றி எதுவும் தெரியாதெனக்கு.

ஆண்கள் தலைமுடியை வெட்டமாட்டார்கள் டர்பன் அணிவார்கள் என்பதைத்தவிர சீக்கீயம் பற்றி எதுவும் தெரியாதெனக்கு.

வேறு என்னென்ன சமயங்கள் இருக்கின்றன என்றே தெரியாதெனக்கு.

அப்புறம் இந்த நாத்திகம், பகுத்தறிவுவாதம், திராவிடம், பெரியாரிஸம், தமிழரியம், காந்தியம், தேசியம், கம்யூனிசம், மாக்ஸிஸம், சோஷலிஸம், etc etc??????(அடியாத்தி, இம்புட்டு இருக்கா, 😜இன்னும் இருக்கே)

ம்ஹூம் சுத்தம்.

ஒரு "அ, ஆ" கூடத்தெரியாது.

ஆனால்
இந்த சமயங்களோ இயக்கங்களோ
அனைத்துமே அடிப்படையில்
மனித ஒழுக்கத்தையும் மனித நேயத்தையும் மட்டுமே போதிக்கின்றன,
பின்பற்றச்சொல்கின்றன
என்பது மட்டும் நன்றாகப்
தெரியுமெனக்கு.

இந்து என்றால் மத மூடநம்பிக்கைகள்;
இஸ்லாமென்றால் மதத் தீவிரவாதம்;
கிறிஸ்தவமென்றால் மத மாற்றம்

இன்னும் என்னென்ன உள்ளனவோ அவையெல்லாமே
பணம், புகழ், பதவி, ஆதிக்க ஆசை
மற்றும் வரட்டு கௌரவம் என்பவற்றுக்காக
சில கயவர்கள்
தமக்குத் தாமாகவே
கற்பிதம் செய்துகொண்டு
தம்மைச்சார்ந்த
கூர்மழுங்கிய சிந்தனையாளர்களையும்
குறைவிலை அடிமைகளையும் கொண்டு
பரப்புரை செய்து
நிலை நாட்டிய
பத்தாம்பசலித்தனங்கள் !

இதை தெளிவாக உணரும் திறன் வேண்டும் நமக்கு !

நம்மால் எப்போதும்
உருவாக்கவேமுடியாத
உயிர்களை,
சிந்தனைகளை,
தனிமனித கருத்துச்சுதந்திரத்தை,
கொள்கை விழிப்புணர்வை
அழித்து ஒழித்தேனும்
தம் சந்ததிக்கு
பொருள் சேர்த்துவிடத்துடிக்கும்
சுயநல சீமைக்கருவேலங்களை
கவனமாய் கண்டறிந்து
களையெடுக்கவேண்டும் !

நான் ஒரு இந்து,
எனக்கு
இந்த உலகம்முழுதும் இந்துக்கள் பரவவேண்டுமென்றோ
உலக நாடுகள் அனைத்தும் இந்து நாடாக வேண்டுமென்றோ
தீவிரவாத மனநிலை இல்லை.
அப்படி எனக்கு கற்பிக்கப்படவுமில்லை.

என் சமயம் சார்ந்து
என் மொழி சார்ந்து
என் இனம் சார்ந்து
அவற்றின் நிழலில் நின்று
கொள்கைகளை தவறாமல் கடைபிடித்து
சக மனிதனிடம்
எந்தவித திணிப்புமில்லாத
எந்தவித ஆதிக்கமுமில்லாத
எந்தவித நிபந்தனைகளுமில்லாத
அன்பையும் கருணையையும் வற்றாது வழங்கும் சுதந்திர மனுஷியாக வாழ விரும்புகிறேன் !

என் சந்ததிக்கும் இதையே கற்றுக்கொடுக்க விரும்புகிறேன்!

மதம் மொழி இனத்தின் பெயரால்
மாற்சரியங்களின் பெயரால்
முட்டாள்களால்
மரணித்து முடித்து வைக்கப்பட்ட
மனிதர்களின்
ஆன்மாக்களின் ஆணைக்கிணங்க

மனிதத்தின் மிகுதியின் முன்பு !

இது நடக்கட்டும் !

மனிதநேயம் மட்டும் மலரட்டும் !


March 18, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக