ஏவாள் !!!

சீதையின் ராமன் கடைசி அத்தியாயங்கள் எரிச்சலை கிளப்பியிருந்தன.

பிரஜைகள் சந்தேகித்தபோது தான் உயிராய் நேசித்த மனைவியைத்துறந்து தன் ராஜ்யதர்மம் காக்கவேண்டிய நிலையில் ஶ்ரீராமனிருந்த இதே தேசத்தில்தான்,

தன் மனைவியை அந்த ஆதிசக்தியின் ரூபமாய் உணர்ந்து உருவகித்து பூஜித்து வணங்கி துணையின் முக்கியத்துவத்தை உணர்த்திய உதாரண புருஷர்களாய் ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரும் அபிராமிப்பட்டரும் தோன்றினார்கள்.

இந்த வரலாற்று முரண் பெண்ணடிமைத்தனம்/ஆணாதிக்கம் போன்ற கோட்பாடுகளின் மீது குழப்பத்தை ஏற்படுத்துகிறதல்லவா?

ஒரு பெண் மனதளவில் தயாராக இல்லை என்றாலும் கணவனின் உணர்வுகளை மதிக்கிறாள்.
இன்னொருத்தி குடிபோதையுடன் வரும் கணவனின் கட்டாயத்தேவையை தீர்க்கிறாள்.
மற்றுமொருத்தி தன் காதலனின் மூளைச்சலவையில் மயங்கி தன்னை இழக்கிறாள்.
வேறொருத்தி குளிர்பானங்களில் கலக்கப்படும் துரோகங்களுக்கு பலியாகிறாள்.

ஒரு இளம்பெண் இரும்புக்கம்பியால் வன்புணரப்படுகிறாள்.
ஒரு கிழவி அவசர உதவி ஊர்தியில் வன்புணரப்படுகிறாள.
ஒரு பள்ளிப்பருவப்பெண் கரப்பமாக்கப்பட்டு அந்தக்கரு கைகளால் கலைக்கப்பட்டு வன்புணரப்படுகிறாள்.
ஒரு சிறுமி அயல்வீட்டவனால் வன்புணரப்பட்டு எரியூட்டப்படுகிறாள்.
ஒரு பெண்குழந்தை கொலுசுக்காக கொலையாகிறாள்.
ஒருத்தி எந்த காரணமும் தெளிவாக இன்றி எதற்காகவோ மரணிக்கிறாள்.

ஒருத்தி நிறைய தகுதிகள்,திறமைகள் இருந்தும் தான் சார்ந்த சமூகத்தின் கட்டுப்பாடுகளை மீறி ஒரு அங்கீகாரத்திற்காகப் போராடுகையில்
மற்றொருத்தி எந்த திறமையும் இல்லாமல் தன் தந்தை அல்லது கணவனின் செல்வாக்கைப்பயன்படுத்தி பெரும் வாய்ப்புகளையும் பிரம்மாண்ட மேடைகளையும் பெறுகிறாள்.

காதலென்ற பெயரில் ஒருத்தி அமில வீச்சுக்கு ஆளாகையில் மற்றொருத்தி பணமில்லை பொருளில்லை என்பதற்காக உண்மையான காதலைக்கூட காவல்துறை வரை கொண்டு போகிறாள்.

குடும்பத்துக்காக ஒருத்தி தன் ஆசாபாசங்களைத்துறந்து திருமணம் செய்தோ செய்யாமலோ இருக்கையில் மற்றொருத்தி மாமியார் வேண்டாம் நாத்தனார் வேண்டாம் மூக்கு சரியில்லை முழி சரியில்லை என்று நிராகரிக்கிறாள்.

வரதட்சணை கேட்பவனை திருமணம் செய்யமாட்டேன் என ஒருத்தி பிடிவாதமாய் இருக்கையில் மற்றொருத்தி பெற்றோரின் சேமிப்பை வழித்தெடுப்பதில் குறியாய் இருக்கிறாள்.

எந்தவித குடும்ப ஆதரவுமின்றி ஒருத்தி தன் மனநலம் குன்றிய பெண்குழந்தையை வளர்க்கப்போராடுகையில் மற்றொருத்தி தன் கணவனின் சுற்றத்தார் தன்னுடன் தங்க வந்தால் குழந்தையை கொன்றுவிடுவேன் என மிரட்டிகிறாள்.

வரதட்சணை கொடுமை தாளாமல் ஒருத்தி தற்கொலை செய்து கொள்கையில் மற்றொருத்தி ஒற்றைப்பிள்ளையான கணவன் தன்னுடைய பிறந்த ஊரில் வீடு கட்டவில்லை என்பதற்காக வரதட்சணை கொடுமை என பொய்புகார் அளிக்கிறாள்

தன்னுடைய கருத்து/சிந்தனை சுதந்திரம் பறிக்கப்படுவதற்காக ஒருத்தி விவாகரத்து கேட்கையில் தனிக்குடித்தனத்திற்கு ஒப்புதல் தரவில்லை என்பதற்காக மற்றொருத்தி விவாகரத்து கேட்கிறாள்.

தொழிலை சிறப்பாக செய்ததற்காகவோ அநீதியை தட்டிக்கேட்பதற்காகவோ ஒருத்தியின் ஒழுக்கம் கழு(ழி)வேற்றப்பட மற்றொருத்தி மனம்போன போக்கில் திரிந்து
மிகச்சாதாரணமாக கருக்கலைப்புகள்(!) செய்து கொள்கிறாள்.

இப்படியான சந்தர்ப்பங்களை நாம் ஏதோ ஒரு விதத்தில் நாம் கடந்து வந்திருப்போம்.

சட்டம் (மற்றும்/அல்லது) தார்மீக ரீதியாக இவை ஒவ்வொன்றும் குற்றம்/ குற்றமற்றவை என வகைப்படுத்தப்படலாம்.

ஆனால் "பெண்ணியவாதம்" என்ற கருப்பொருளில் இவை எவ்வாறு கருதப்படுகின்றன? என்றொரு கேள்வி எழுகின்றது.

தேவையற்ற கட்டுப்பாடுகள் பெண்கள் மீது திணிக்கப்படக்கூடாது என்பது எந்தளவுக்கு நியாயப்படுத்தப்படுகிறதோ அதே அளவுக்கு அந்த நியாயப்படுத்தல்கள் குற்றங்களை மறைக்கும் கேடயமாக பயன்படுத்தப்படக்கூடாது என்பதிலும் இருக்கவேண்டும்.

"பால் இயல்" சார்ந்த கண்ணோட்டத்தில் இவை பார்க்கப்படாமல் துஷ்பிரயோகம் மற்றும் குற்றம் என்றவகையில் பாகுபடுத்தப்படவேண்டும்.

தவறுகள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு காரணத்திற்காகவும் நியாயப்படுத்தப்படக்கூடாது.

இல்லையென்றால் 'பெண்ணியம்' என்கிற வாதமே தவறாகத்தான் பார்க்கப்படும்.

சக மனிதரை சக மனிதராக பார்த்து வாழ்வதுதான் ஒரு சரியான சமூக வாழ்வியல் கோட்பாடாக இருக்கமுடியுமே தவிர அது சக மனிதனா மனிதியா என்கின்ற நோக்கில் பாரக்கப்படக்கூடாது.

இங்கே பெண்ணியவாதம் ஆணாதிக்கம் என்பதெல்லாம் தாண்டி ஒருவர் மனதிலுள்ள வக்கிரங்கள்,காழ்ப்புணர்ச்சிகள் வேரோடு களையப்பட்டு மற்றவர் உணர்வுகளை மதிக்கின்ற மனநிலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பால்நிலை தாண்டிய உணர்வு ரீதியான நட்பு பாராட்டிய ஶ்ரீகிருஷ்ணரும் திரௌபதியும்
பால்நிலை தாண்டிய உணர்வு ரீதியான சகோதரத்துவம் பேணிய
விவேகானந்தரும் சகோதரி நிவேதிதாவும் கூட இங்கேதான் தோன்றினார்கள்.

இந்த வரலாற்று ஒற்றுமை சுட்டி நிற்பது இதைத்தான் !!

(பி.கு : மேலே ஆண் பெண் இரு பாலாரும் சம்பந்தப்படாத ஒரு சூழ்நிலையை குறிப்பிடக்கூடியவர்கள் மட்டுமே இது பெண்ணியம்/ ஆண் இயம் சார்ந்த பதிவு என்று சாடும் உரிமை பெற்றவர் ஆவீர்)


March 26, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக